020: பார்வதியின் கதை

புகழ் என்பது நிரந்தரமில்லை
இதை அறிதலும் உணர்தலும் சமமில்லை
திரையில் கொடியை கட்டினாலும் அவிழ்த்தாலும்
என்றும் இவளின் ஆட்சி தான்
இதை அவள் அறிந்தால் ஆனால் உணரவில்லை

நான் மீண்டும் என்னை திரையில் காண விரும்புகிறேன்.
உலகம் மாறிவிட்டது என்றான் அவளின் அவன்.
மரணத்தை விட கொடுமையானது மறுக்கப்படுவது என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினாள்

அவள் வந்த நேரம் அவளின் காலின் படியில் மேகங்கள் மழைத்துளிகளாய் சரணடைந்தன.
அவளின் ஈரமான கால்கள் ஒவ்வொரு இயக்குனரின் வீட்டை நோக்கி நடைபோட்டன.

ஒருவன் அவளின் கருத்த நிறம் அசிங்கமாக இருப்பதாக கூறி முகத்தை திருப்பி கொண்டான்.
அடுத்தவனோ அவள் தடியாக இருப்பதாக கூறி சிரித்து வழியனுப்பினான்
மற்றொருவனோ கையெடுத்து கும்பிட்டான்.
இவனாவது என்னை மறக்கவில்லையே என எண்ணிஅவளும் முகம் மலர்ந்தாள்.
ஆனால் அவன் கும்பிட்டதோ அவளை வெளியே போக சொல்வதற்கு.

அவளின் கண்களிலிருந்து கசிந்த துளிகள்.
ஒவ்வொன்றும் தீப்பொறிகள்.
அந்த நகரமே கொழுந்து விட்டு எரிந்தது.
அவளின் ஆவேசத்தில் அவள் விஸ்வரூபம் எடுத்தாள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு
பார்வதியின் கதையை திரைப்படமாய் எடுக்க
ஒல்லியான பனி போல் தோள் கொண்ட ஒரு பெண்ணை
சந்திரக்கண்டத்திலிருந்து கொண்டு வந்தனர்.
பின் அவளின் உடல் முழுக்க பச்சை சாயம் பூசினர்.

பார்வதி மீண்டும் ஆவேசம் அடைந்தாள்
திருந்தாத ஜென்மங்கள் என்று கூறி சிவன் சிரித்தான்.